கொரோனா(கட்டுரை)

 ஈமச்சடங்கு :

ஆட்டுப்புலுக்கை மற்றும் மூத்திர நெடி ஆளை துளைக்கும். ஒற்றை கோழிக்குஞ்சு வலம் வர, பெருச்சாளி பொந்துக்குள் நசுங்கிய பழத்தை இழுத்துச் செல்ல, பல வகை மர இலைகள் கட்டுகட்டாக கிடத்தி வைக்கப்பட்டடிருக்கும் . ஆற்றின் வழித்தடத்தை முகத்தில் வைத்திருப்பாள், பற்கள் தன்னை விடுவிக்க காத்துக் கிடக்கும் . இருத்த போதிலும் அகோரமாக சிரிப்பாள், தேங்காய் நாராய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் தலையில் வெள்ளை மயிர்கள் நடப்பட்டு இருக்கும் . இவையனைத்தையும் கசங்கிய அவள் கிழிசல் துணி காட்சியளிக்கும். ஓ....ஆத்தாள சங்க திருவணும், வாங்கி குடிக்கிற கழுதைக்கு, சுரக்குடுவை தோள்ல கிடக்கணுமாம்..! அது மாறில உங்கம்மா.. சொன்னான்னு பேப்பர் போனாவை தூக்கிட்டு வந்து நிக்க. உனக்கென்ன ஈமச்சடங்கு பத்தி தெரியணும், அவ்வளவுதானே.. எழுதிக்கோ எனக்கு படிப்பு வாசனை அறவே இல்ல, அதனால பத்து வயசுல இருந்தே ஆடுதான் மேய்ச்சுட்டு இருப்பேன்.பேயோ...! மனுச மக்கமாறோ... எதையும் பார்த்து பயப்பட மாட்டேன், அம்புட்டு தைரியமா, என்ன வளத்தாக, அப்போலாம், சாவுன்னா ஊரே ஒன்னு கூடி நிக்கும், இந்த காலத்துல சாவுக்கு காரணம் கேட்டுதா.. வரானுங்க. பருவ வயசுல... இறந்தவக விட்டில ஏதாவது, பொருள் எடுத்து குடுத்துட்டு இருப்பேன். காலம் குடுத்த அனுபவத்துல, தைரியத்துல, முன்ன நின்னு நா... வேலைய செய்ய ஆரம்பிச்சா...! பின்னாடியே... ஊர் ஆளுக, உரிமைக்கார பயலுக எல்லாம் ஆரம்பிச்சுருவாங்க. இருந்தாலும், இந்த மாறியான காரியத்துல, ஈடுபட்டா பயப்படக் கூடாது. கடவுள் மேல பாரத்தை போட்டு வேலை செய்யணும். இப்படியே... பழக்கப்பட்டு இருபத்தி அஞ்சு வயசுல ஈமச்சடக்கு செய்ய தொடங்கிட்டேன். நா... தொடங்கல அவுகளா...கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பிறந்த இடம் கீழக்கோட்டை, வாக்கப்பட்ட இடம் கம்மாப்பட்டி, இருந்த இடம் சுப்பிரமணியபுரம், இப்போ இருக்குறது முத்துநகருன்னு, இந்நாள் வரைக்கும் இத்தனை ஊருக்குள்ள இருநூறுக்கு ஆட்களுக்கு மேல, என் கையால குளிக்க வச்சு சாமியாக்கிருக்கேன். இப்போ, என் வயசு ஏழுபத்தி அஞ்சு, கிட்டத்தட்ட "அம்பது வருசம் ஆயிருச்சு", ஆளுக இழுத்துட்டு இருந்துச்சுன்னா சொல்லியனுப்புவாக. நா...மூஞ்சி சுண்டி இருக்குறதையும்,பால் குடிக்கிற அழக வச்சு, கைய புடிச்சு பார்த்துட்டு சொல்லிருவேன். இது ஒப்பேறுமா? ஒப்போறாதான்னு ? சர்.. சர்.. தென்னங்கீற்றை கிழித்துக் கொண்டே பேசுகிறாள் ஆச்சி. அந்த காலத்துல சாதி பழியா.. இருக்கும். வேத்து ஆள உள்ளயே விட மாட்டாக . இப்போ வேற வழி இல்ல, எடுத்துப் போட்டு செய்ய ஆள் இல்லைன்னு, அவனவன் மண்டைய பிச்சி சுத்திட்டு கிடப்பான், இந்த சூழ்நிலையில, ஈமக்காரியம் செய்ய ஆள் கிடைக்குறதே பெரிய விஷயம்.இந்த இழவு வீட்டுக்கு மட்டும் சாதி மதமெல்லாம் கிடையாது. செத்த வீட்டுல நாலு பேரு இருக்கணும் அது
புண்ணியம். " நா..! சின்ன பிள்ளைய இருக்குப்ப, இறந்தவர்கள உட்கார வைக்க மூங்கில் கம்பை வெட்டி, நட்டி, கட்டி, நாற்காலி மாறி செய்வாக, இல்லைனா...உரலு, ஆட்டாங்கல்லு, வடிவான பாறைல சாத்தி வச்சி தூக்கிட்டு போவாக, ஊர் பெரிய மனுசன் வீட்டுல நாற்காலிய கடன் வாங்கிட்டு குடுக்குறது வழக்கம். செத்தவுகள குளிக்க வைக்கிறதுக்கு, ஆம்பளையாள்னா..! சுத்தி வேட்டிபிடிப்பாக. பொம்பளையாள்னா.! சேலை பிடிப்பாக.இதுவும் போக, பிண்ணி வச்ச தென்னை கீத்து, பனைஓலை மறைப்பும் உண்டு. இறந்தவக உடம்ப நல்லா
தண்ணி ஊத்தி கழுவனும், தலைக்கு சீயக்காய், முகத்துக்கு மஞ்சள், உடம்புக்கு சந்தனமுன்னு தடவி, பாவடை, ஜாக்கெட் மாட்டிட்டு சேலைய கட்டி விட்டுருவேன். வீட்டுல வச்சிருக்கும் போது ஒரு சேலைக்கட்டு. அதுவே, சப்பரத்துல (ரதத்தில்) ஏத்தும் போது வேற சேலைக்கட்டு. அடக்கம் செய்ர வரைக்கும் அவுராத மாறி கட்டணும்.

"பொம்பளைக்கு மானம் தான் பெரிசு, அவ ஊசுரு போனா மட்டும்... இந்த மானம் இல்லாம போயிரும்மா... என்ன? அவ மானம் நம்மளால போய்ர கூடாது பாரு".அதான், சேலைய கழறாத மாறி இறுக்கி கட்டி விட்டுரணும்.

இறந்தவரை குளிக்க வைப்பதை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. இறந்தர்களின் உடலில் வீசும் துர்நாற்றம், புண்கள், கொப்பளங்கள், கழிவுகள் வெளியேற்றம், இரத்த படிந்த புற்றுநோய் உடல்கள், நீண்ட நாள் கிடத்தி வைக்கப்பட்ட உடலானது மறுத்துப்போய்,புண்களாகி, சீழ் உடைந்து நெழியும் புழுக்களால் ஆன உடலைத்தான் இவர்கள் சாமியாக்குகிறார்கள். பிணவாடை வர கூடாது என்பதற்காக வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி, அதில் உப்பையும் இட்டு, துணியை வைத்து அடைத்து விடுவர்.

அதுபோக "எட்டுக்கட்டு" கட்டி விடணும். [வாய்க்கட்டு, நாடிக்கட்டு,தலைக்கட்டு, கைக்கட்டு, தொப்புள் கட்டு கோவணக்கட்டு முழங்கால் கட்டு,கால் கட்டு]

தலை வடக்கையும் கால் தெக்காணிக்க பார்த்த மாறி படுக்க வச்சுரனும். (படுத்து கிடந்த தாயின் மீது ஏறி, தொங்க விடப்பட்ட பச்சிலைகளை கடித்து இழுக்க முற்பட்டது அந்த ஆட்டுக்குட்டி.) சுற்றுப்புரத்தில் மாலை அணிவித்தல், பறை அடித்தல், ஒப்பாரி வைத்தல் மற்றும் பாடல் பாடுதல், பாடை கட்டுதல் அதனை அலங்கரித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதில் இறந்தவருக்கு துணி, பொருள், பணம் மெய்யாக கொடுக்கப்படும், காகிதத்தில் குறித்து வைக்கப்படும். இதனை 'கட்டை மொய்' மற்றும் 'இழவு பணம்' என்பர். இவ்விடத்தில் இருந்து நிகழ்வுகள் நிகழ்த்துதலாக மாறுகிறது. இதன்பின் சடங்குகளாக உருப்பெருகிறது. தாய்வழி உறவுமுறைல இருந்துதான் பொருள் வரும், இதைதான் "கோடி"ன்னு சொல்லுவாக, இதில் அம்மா வழி உறவுகள் கொடுக்கும் பொருள்கள் 'பிறந்து அறுத்த கோடி', அப்பா வழி உறவுகள் கொடுக்கும் பொருட்கள் 'புகுந்து அறுத்த கோடி'. ஊரார் விதவையான பெண்ணுக்கு, வழங்கும் வெள்ளை துணியை 'வெள்ளை கோடி' என்பர். கோடியில் எடுத்துவரும் நீர் மற்றும் பொருட்கள் மூலம் இறந்தவரை, மீண்டும் குளிப்பாட்டவும் மற்றும் அலங்கரிக்கவும் செய்வர். "நீர் மாலை "என்பது இறந்தவரின் சொந்தம் கொண்டாடிகளான பெண்கள் முதலிலும், அதன்பின் ஆண்களும் பொது நீர்பிடிப்பு (அ) நீர்வரத்து பகுதிகளுக்கு சென்று, குளித்து, தீருநீறு பூசிக் கொள்வார்.இதில் மகள்,மருமகள் மற்றும் மூத்தமகன், இளைய மகன் என்ற வரிசை பின்பற்றியே குளிப்பர்.வயது மூத்தோருக்கு கும்பா, இளையோருக்கு செம்பு, காரணம் வயது பாகுபாடு மற்றும் முன்னுரிமை. அதுமட்டுமின்றி, கையோடு எடுத்து வந்த நீரை, பெண்கள் பிணத்தின் உடல் முழுவதிலும் ஆண்கள் காலில் மட்டும் சுற்றி ஊற்றுவார். "மாவு விளக்கு" பேரன் மற்றும் பேத்திகளால் மட்டுமே செய்யப்படும் முறை, பச்சரிசி (அ) அரிசி மாவில் நீர் இட்டு பிணைந்து, குழியாக்கி அதனுள் எண்ணெய்யை நிரப்பி, திரி வைத்து விளக்கு ஏற்றப்படும்.'ஸ்ரீ தேவி வாங்குதல்' குடும்பத்தில் இறக்கும் மூத்த (அ) முதல் ஆளுக்கு வீட்டிற்கு வந்த ஸ்ரீதேவி எனப்படும். மருமகளால் மட்டுமே செய்யபடும் முறை, நெல்மணிகளால் நிரப்பப்பட்ட மரக்காணம் (அ) உலக்கு மீது ஏற்றப்படும் விளக்கை மரக்கா விளக்கு '(அ) 'நாழி விளக்கு' என்பர். மாவு மற்றும் மரக்கா விளக்கு அதற்குரிய நபர்களால், மூன்று முறை இறந்தரை சுற்றி வலம் வருவார். இவ்விரு விளக்குகளும் இறந்தவர் தலைமாட்டில் இடது மற்றும் வலது புறத்தில் எரிந்துக் கொண்டிருக்கும். மாவு விளக்கு எரிந்த பின், பிறருக்கு உண்ண வழங்கப்படும். இல்லையேல், மாடுகளுக்கு சாப்பிட அளிக்கப்படும். 'மரக்கா விளக்கு' பிணம் வீதிக்கு எடுத்து செல்ல பட்டபின், வீட்டிற்குள் கொண்டு செல்லபட்டு, அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் 11,16,30 நாட்கள் வைத்து வழிபடுவர். (கொக்...கொக்... வீர்... என சத்தமிட்டபடி, தலையை உயர்த்தி பார்க்கிறது, கோழிக்குஞ்சு. என்ன ஒரு குஞ்சுதா... நிக்கினு பாக்கியா.? இந்த காக்காதா.. இங்க வந்து போட்டிருச்சு. என் சேலைக்குள்ளயே இருக்கனும்னா எப்படி..! அழிச்சாட்டியம் பண்ணுது, வாய்லயே இடிக்கனும்.) கள்ள கபடமற்ற சிரிப்புடன் மீண்டும் கதையை தொடர்கிறாள்.. கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் சடங்கு. தாலி அறுத்தல் 'மனைவி இறந்து கணவர் உயிரோடு இருந்தால், தாலியை அவரது கையில் ஒப்படைப்பார்கள். மாற்றாக கணவன் இறந்தால், மனைவி புதுப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டு வட (அ) தென் திசையை நோக்கியபடி அமர வைத்து, வளையல்கள் உடைக்கப்பட்டு, நெற்றிக் குங்குமம் அழிக்கப்பட்டு, தலையில் வைத்த பூக்கள் பீய்த்து எறியப்பட்டு, இறுதியாக தாலி அறுக்கப்படும். அறுக்கப்பட்ட தாலியை, கணவனின் காலில் உள்ள இரு பெருவிரல் (அ) கட்டை விரலில் கட்டி விடுவார்கள். இப்படியாக வீட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் குழந்தைகளை,

'ஏந் தாலிய அறுக்க...தான். இந்த வயித்துல வந்து பொறந்தியா?'

என தாயார் திட்டும் வழக்கம் உண்டு. 'சூரை விடுதல்' தகப்பன் இறந்த பட்சத்தில் (எ.கா அண்ணன் மற்றும் தங்கை) அவரின் மகன் மற்றும் மகனின் வாரிசுகள் ரதத்தின் முன் நின்று காசு பழம் மற்றும் முறுக்கு (இதர பலகாரங்கள்) போன்றவை வீசுவர். மகள் மற்றும் மகள் பெற்ற பிள்ளைகள் ரதத்தின் பின் பூக்களை பீய்த்து எறிந்தவாறு வலம் வருவர். குடம் உடைத்தல் வீதி முச்சந்தி (அ) தெருமுனை இறுதியில், மகள் முறையில் இருப்பவர்கள் மட்டும் செய்யும் சடங்கு (இதனுள் மருமகள் அடக்கம் இல்லை) பிணத்தை 'மூன்று முறை' சுற்றி பானை உடைக்கபடும். இவ்விடத்தில் இருந்து பெண்கள் யாரும் பிணத்தை தொடர கூடாது. இக்கணம் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகும். சுடுகாட்டில் நுழைந்தபின், பெற்ற மகன்களுக்கு தலை மற்றும் கைகளில் மயிர் வழிக்கப்படும். இறந்தவர் பசியுடன் இருக்க கூடாது. என்பதிற்காக, பால் மற்றும் வாய்கரிசி இடப்படும். இப்படியாக பானை ஏந்தி நடக்கும் மகனின் மூன்று சுற்றில் ஒவ்வொரு சுற்றுக்கும் துளைகள் இடப்பட்டு பானை உடைக்கப்படும். இறுதியில் முகம் பார்த்த பின், எரிப்பாதாய் இருந்தால் சாணம் மற்றும் கட்டைகளால் அடுக்கப்பட்ட தளத்தில் படுக்க வைத்து, கொள்ளி வைக்கப்படும். மண்ணில், புதைப்பதாக இருந்தால், மூன்று முறை மண் அள்ளி வீசுவர்.

தொடக்கத்திலிருந்து, இறுதிவரை எல்லா ஈமச்சடங்கிலும் வலம் வருவது "நெற்றிக்காசு ஒரு ரூபாய் நாணயம்".

அட...ஏம்..லேய்..... நீ வேற, வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வரவே நேரம் சரியா இருக்கும், வந்த உடனே குளிச்சுட்டு துணிய மாத்திக்குவேன், அவ்வளவுதான்..! கோட்டிக்காரப்பயலே.. இந்த வேலைய செய்ரது கௌரவம், இதனால் சமுதாயத்துல நமக்கு மரியாதையும், மதிப்பும் கூடும், என்னை எல்லோரும் மதிப்பாத்தான் நடத்துராக.. அதுல ஏதும் கொறவு இருக்காது. நா..! காசு ஏதும் வாங்க மாட்டேன், அவுகளா ஏதும் பிரியபட்டு சேலை தருவாக, வாங்கி வச்சுக்குவேன்.

'இறப்புனா இறப்புதான்' அதுக்கு எதும் விளக்கம் வேணுமா ?.

என் வயசுக்கு எம்புட்டு சாவை பார்த்துருக்கேன், விபத்துல செத்தாக் கூட மூட்டை கட்டி வச்சு மனசார அழுது தீர்த்து புடலாம்.

இந்த கொரோனாதான் ரொம்ப மோசமான கழுத.., சாவுலயே நல்ல சாவு ? கெட்ட சாவுன்னு... இருக்கு. இது என்ன ரகம்னே தெரியல ? ஒட்டுவாரொட்டி மாறி ஒட்டிக்கிது. பெத்த பையன் செத்தாக் கூட "மாஸ்க்" போட்டுத்தான் அழ சொல்லுறானுங்க. பெத்தவுகளும் தொட முடியாம, மத்தவுகளும் பக்கத்துல போக முடியாம, உனக்கு வந்திருமோ? எனக்கு வந்துருமான்னு? கண்ணுல பயத்த வச்சுட்டுல்ல இருக்க வேண்டிருக்கு.

அய்யய்யோ மறந்துட்டேன் நேரமாச்சுலே..? ஒரு வாய் சாப்பிட்டு போ லேய்..

சடங்குகளில் தலையாயது இறப்பு சடங்கு. இவை பல சடங்குகளின் கூட்டமைப்பாகவும், உறவு ஒருங்கிணைப்பாகவும், செயல்படுகிறது. இவை தன்னுள் கலாச்சாரத்தை, இனக்குழுவை, சமூக பிரிவு மற்றும் பண்பாட்டை சுமக்கிறது. இம்மண்ணில் வரலாறு புதைந்திருக்கிறது. வரலாறு வாழ்வியலை சுட்டிக்காட்டுகிறது. இவ்வுலக உயிர்கள் அனைத்தும், தன்னை இப்புவியில் நிலைநிறுத்த படும் துயரை யாவரும் அறிந்ததே.

"மரணம் என்பது வாழ்தலுக்கும் பிழைத்தலுக்குமான நேரத்தை (அ) கால கணக்கை முடித்து, உடலை இயற்கையோடு இணைப்பதாகும்".

இதில் யாரும் விதிவிலக்கல்ல. 'மனிதன் ஆக சிறந்த சல்லிப்பயல்' என்ற கூற்றுக்கு இணங்க. எவ்விடத்திலும், தம்மை அடையாளமாக்க தவறியதில்லை. இதற்கு மதம் சாதி மற்றும் பொருளதாரம் உதவுகிறது. கால சக்கரத்தின் ஏற்ற இறக்கங்களை, பிரித்து, உணர, கலாச்சார மாற்றம் மற்றும் உலகமயமாதலே காரணம். இதனுடன் சுற்றுச்சூழல் அமைப்பு, பேரிடர் மற்றும் நோயுடன் கைகோர்த்தது எதிர்பார்த்ததுதான். இங்கு மனித அடையாளம் நொறுங்கி போகிறது. கொரோனா இறப்பால்,

சடங்குகள் மின்மயானத்தில் வீழ்ச்சியடைகிறது.

பெற்ற தாயாக இறப்பினும், அவரை குளிக்க வைக்க ஆண்பிள்ளைக்கும் இடமில்லை. ஆணுக்கும் , பெண்ணுக்கு இவ்விடத்திலும் 'பால் அடையாளம்' வரையறுக்கபடுகிறது. சங்கு ஊதுபவர் மற்றும் மணி அடிப்பவர் பிணத்தை குளிக்க வைப்பவர், பாடை கட்டுபவர். மயிர் வழிப்பவர், பிணத்தை எரிப்பவர் (அ) புதைப்பவருக்கு தொடர்பு உண்டு. ஆனால் சங்க சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இல்லை. இவ்விடத்தில், சாராயம் (அ) மது மற்றும் பண சண்டை, சொத்து(பாகம்) பிரித்தல் முதன்மையாகிறது. இதில் முக்கிய 'அடையாள அரசியலாக' பொது சுடுகாடு வாங்குவதில் சிக்கல். இறந்தவரை புதைக்க மற்றும் எரிக்க கட்டணம் வசூலித்தல், சாதி மற்றும் மதத்தில் கலப்பு திருமணம் செய்தவருக்கு சடங்கு செய்வதில் சிக்கல் மற்றும் இடுகாட்டில் இடமில்லை. பண பலம் படைத்தவர் எழுப்பும் கல்லறையினால், புதைக்க இடம் குறைகிறது. ஆகையால், மண்ணில் புதைத்த ஏழையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, வேறொரு ஏழையின் உடல் புதைக்கபடுவதும், அவ்வுடலை, இரு குடும்பமும் வழிப்பட சண்டை இட்டுக் கொள்வது, நமக்கு வேடிக்கையாக இருக்கலாம். இருப்பினும், இவ்வளவு பெரிய பிரச்சனையை உள்ளடக்கிய தளத்தில், எவ்வித எதிர்பார்பு இல்லாத ஆடியாக (அ) பெண்ணாக சடங்குககளை அரங்கேற்றுகிறாள் இந்த மூதாய் ?.

Comments

Popular posts from this blog

புத்தகத்தின் வாசனை (கட்டுரை)